சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (18) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மைக்காலமாக நாட்டில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகளை வழங்குவதன் காரணமாக பல மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் சிறிலங்காவில் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு நிலவி வருக்கின்ற கடுமையான தட்டுப்பாடு இன்னும் பல உயிரிழப்புகளுக்கு காரணம் ஆகலாம் என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
“சிறிய நோய்களுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் தரமற்ற மருந்துகளை செலுத்தியதால் இறந்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,'' என்றும் அவர் கூறினார்.
தவிரவும் சந்தேகத்திற்குரிய மருந்துகளை உடனடியாக திரும்பப் பெறுமாறும், குறித்த மருந்துகளைக் கொள்வனவு செய்யும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமதாச அதிகாரிகளிடம் மேலும் வலியுறுத்தினார்.
அசமந்தமாக இருப்பது ஏன்?
''தரமற்ற மருந்துகளை வழங்குவதால் பலர் உயிரிழக்கும் போதும் சுகாதார அமைச்சர் மௌனமாக இருப்பது மாத்திரமல்லாமல் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் அசமந்தமாக இருப்பதும் ஏன்?'' என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலை தொடருமோ என எழுந்துள்ள அச்சத்தினால் நாடாளுமன்றத்தில் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.