பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் விற்பனை: ஆரம்பமாகிறது விசாரணை
பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சேர்ந்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாலியல் உள்ளடக்கங்களை சமூக வலைதளக் குழுக்கள் மூலம் வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப்படும் இணையவழி வலையமைப்பு தொடர்பாக இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் இயங்கி வரும் சில குழுக்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் விற்பனைக்கு வழங்கப்படுவதாகவும், அவற்றை வாங்குவதற்கு சில பயனர்கள் முயற்சிப்பதாகவும் அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கை காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் கணினி குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உதவி இலக்கங்கள்
முதற்கட்ட ஆய்வில், போலியான சமூக வலைதளக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டு, அந்தக் கணக்குகளை இயக்குபவர்களுக்கு நெருக்கமானவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், சிலர் தங்களது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பிற தனிப்பட்ட உள்ளடக்கங்களைப் பகிர முயன்ற சம்பவங்களும் கண்டறியப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இதுபோன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் நபர்கள் உதவியை நாடலாம்
1938 – பெண்கள் தொடர்பான உதவி
1929 – குழந்தைகள் தொடர்பான உதவி
இரு கட்டணமில்லா உதவி எண்கள் மூலமும் தேவையான உதவியைப் பெறலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகத் தெரிகிறது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் சமூக வலைதளப் பயன்பாட்டை நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், குழந்தைகள் இணையத்தில் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |