குடும்பபெண்ணின் உயிரைப் பறித்த சேலைன்
அதிகளவு சேலைன் செலுத்தியதால் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் (09) காய்ச்சல் மற்றும் சிறுநீரகத்தில் கிருமி தொற்று என திருகோணமலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதி இலக்கம் 12 இல் அனுமதிக்கப்பட்ட ரஞ்சித்குமார் கௌசல்யா எனும் 37 வயதான குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து சிறுநீர் வெளியேறாத நிலையில் தொடர்ந்து 7 – 8 சேலைன்கள் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நோயாளியின் குருதி அமுக்கமும் குறைவடைந்து செலுத்திய சேலைன் அனைத்தும் சுவாசப்பை மற்றும் இதயப்பகுதிகளில் தேங்கியதால் நோயாளிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் உயிரை காப்பாற்றும் கட்டம் தாண்டிய நிலையில் நள்ளிரவு மருத்துவ பிரிவு வைத்தியர்களுக்கு அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே நோயாளி அவசர விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருந்தும் அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த பெண் நேற்று (10) அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலை மட்டத்தில் பெரும் சலசலப்பு
வைத்தியர்கள், தாதியர்களின் ஒட்டுமொத்த தவறால் ஒரு இளம் குடும்ப பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டுள்ளமை வைத்தியசாலை மட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த விடுதி பொறுப்பு தாதியின் ஏற்பாட்டில் கடந்த இரு நாட்களாக பிரபல ஹோட்டல் ஒன்றில் மகளிர் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இத் துரப்பாக்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |