சடுதியாக குறைந்த உப்பு விலை: ஏற்பட்டுள்ள சிக்கல்
உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புத்தளம் (Puttalam) உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கனமழையால் நாடு முழுவதும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் குஜராத்தில் இருந்து உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும், புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது உப்பு அறுவடை நடைபெற்று வருகின்றது.
உப்பு உற்பத்தியாளர்கள்
இந்தநிலையில், உப்பு உற்பத்தியாளர்கள் 50 கிலோ இந்திய உப்பை 4,000 ரூபாவுக்கு வாங்கும் அதே வேளையில், புத்தளத்தில் 50 கிலோ உப்பு மூட்டையின் விலை 1,800 முதல் 2,000 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதுர்தீன் கருத்து தெரிவிக்கையில், "இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்ததே இலங்கையில் உப்பு விலை குறைந்தமைக்கு காரணமாகும்.
உப்பை இறக்குமதி செய்ய அனுமதி கேட்ட அனைவருக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது இதனால், கட்டுப்பாடுகள் இன்றி இந்தியாவில் இருந்து உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது.
திட்டமிட்டு உப்பை இறக்குமதி செய்திருந்தால் உள்நாட்டு உப்பு உற்பத்திக்கு ஒரு நல்ல விலை கிடைத்திருக்கும்.
ஏற்பட்ட வீழ்ச்சி
இன்றும் 1,50,000 தொன்னுக்கும் மேல் உப்பு துறைமுகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, உப்பை இறக்குமதி செய்தவர்கள் அதனை விற்க முடியாமல் தடுமாறுவதைப் பார்க்க முடிகின்றது.
குறைந்த விலைக்காவது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உப்பை விற்பனை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் இருக்கும் போது, எங்களது உப்பை எப்படி விற்பனை செய்வது ? புத்தளத்தில் உப்பு அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது, உப்பை அறுவடை செய்ய உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
நல்ல வெப்பமும் உப்பு உற்பத்திக்கு பெரும் பங்களிப்பைத் தருகிறது ஆனால் உப்பின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இதனால், உப்பு உற்பத்தியாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதைவிட சிறந்த விலை கிடைத்தால் நல்லது என நினைக்கிறோம் அத்தோடு, முந்தைய அரசாங்கங்களிடமிருந்து உப்பு உற்பத்திக்குத் தேவையான நிலத்தை எங்களால் பெற முடியாமல் போனது.
எனவே, புத்தளத்தில் உப்பு உற்பத்தியை மேலும் அதிகரிக்க உதவுமாறு புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
