மீண்டும் யுத்தமா கேட்கிறீர்கள்..! சிறிலங்காவின் தமிழ் அமைச்சரின் கேள்வி
இலங்கையில் தமிழ் தேசியவாதிகளின் பிரிவினை கோரிக்கையான சமஷ்டியை இனப்பிரச்சினைக்கான தீர்வாக அடைவது என்பது கனவே என சிறிலங்காவின் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(20) உரையாற்றிய அவர், பேச்சுவார்த்தையொன்றின் ஒழுக்கத்தை தெரியாத ஒருவராகவே இரா.சம்பந்தன் உள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நான்கு கட்ட பேச்சு

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “அதிகாரப் பகிர்வு குறித்து நான்கு கட்ட பேச்சுக்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க நடத்தியுள்ளார். இந்த அதிகாரப் பகிர்வு பேச்சுக்களில் பங்கேற்ற தமிழ் தேசியவாதிகள் வெளியே சென்று இது தேவையற்றது. சமஷ்டியை அடையாமல் இதனை முடிக்க மாட்டோம் எனக் கூறுகின்றனர்.
நான் அவர்களை கனவு காண வேண்டாம் எனக் கூறுகின்றேன். சமஷ்டியில் இருந்து வட்டுக்கோட்டை வரை சென்று, மீண்டும் திரும்பி 2009 ஆம் ஆண்டு வரை, இந்த நாட்டு இளைஞர்களின் இரத்தம் சிந்தி , மீண்டும் யுத்தமொன்றையா கேட்கின்றீர்கள்?
அவ்வாறெனின் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.இரா.சம்பந்தனும் அந்தச் சந்திப்பில் இருந்தார். அவர் சரத் பொன்சேகாவுடன் சிங்கக் கொடியை உயர்த்தி, யாழ்ப்பாணத்தில் என்ன கூறினார்?ஒற்றையாட்சிக்குள் பௌத்த சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தீர்வுக்கு செல்வோம் எனக் குறிப்பிட்டார்.
அவ்வாறெனில் இன்று வந்து பேச்சு நடந்துகொண்டிருக்கும் போது அவர் எவ்வாறு இவ்வாறு கூறுவார். பேச்சுக்களின் போது குறைந்த பட்ச தகுதி என்ன? பேச்சு தொடர்பான ஒழுக்கம்.
அந்த ஒழுக்கத்தை மீறி, வெளியே சென்று ஊடகங்களுக்கு சமஷ்டியை பெறாமல் நாம் முடிவுறுத்த மாட்டோம் எனக் கூறுகின்றார்.
சகோதரர்களுக்கு கூறுவதற்கு ஒன்று தான் உள்ளது. இந்த நாடு ஒருபோதும் பிரிக்கப்படாது. இந்த நாடு பிரிவினைவாதத்தை எதிர்கொள்ளாது. நீங்கள் மற்றுமொரு யுத்தத்திற்குள் தள்ள வேண்டாம்.
நீங்கள், உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை மீண்டும் எழுப்ப வேண்டாம். இது அச்சுறுத்தல் அல்ல. இது யாதார்த்தமாகும்.
சர்வதேசத்தை மகிழ்ச்சிப்படுத்த எமக்கு விடயங்களை கூற முடியும். அமெரிக்க தூதுவரை மகிழ்ச்சிப்படுத்த எமக்கு விடயங்களை கூற முடியும். இந்திய உயர்ஸ்தானிகரை மகிழ்ச்சிப்படுத்த எமக்கு விடயங்களை கூற முடியும். நடைபெற வேண்டியது அதுவல்ல.
நாம் இனம் என்ற அடிப்படையில், நாட்டில் வாழும் இனமொன்ற என்ற அடிப்படையில் அதிக பெரும்பான்மையுடன் உள்ள மக்களின் உரிமை தொடக்கம் சிறுபான்மையினரின் உரிமைகள் வரை பொது குணம்சமாக ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வோம்.
எம்மால் இடமளிக்க முடியாது

நாம் பயணத்தை மேற்கொள்ள வேண்டியவர்கள். பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாகவே பிரிவினைவாதம் , சமஷ்டியை கோருவதாக கூறினால், அதற்கு எம்மால் இடமளிக்க முடியாது.
இந்த நாட்டின் சாதாரண மக்கள் மாத்திரமல்ல, நான் ஆளுநராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் வடக்கு மக்கள் இதற்கு இடமளிக்க மாட்டார்கள். அடுத்த தேர்தலில் தோல்வி அடையப் போகும் தமிழ் தேசியவாதிகள் முன்னெடுக்கும் பிரசாரத்திற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.
நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஜனநாயக நாடொன்றில் வாழும் உரிமை, காங்கேசன்துறை கந்தையாவிற்கும் உள்ளது. ஆகவே அதற்கு இடமளிக்குமாறு நான் கோரிக்கை விடுகின்றேன்” - என்றார்.