சம்பந்தனின் பதவி விலகல் : மாவைக்கு அவசர அழைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக இரா.சம்பந்தன் தம்முடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
மாவைக்கு அழைப்பு
அத்துடன் தம்மை நேரடியாக சந்திக்குமாறு இரா.சம்பந்தன் கோரியிருப்பதாகவும் ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போது மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளாார்.
அந்த வகையில் விரைவில் நேரடியாக சந்தித்து இரா.சம்பந்தனுடன் இது தொடர்பாக கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக கலந்துரையாடப்படும் எனவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
எனினும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வவுனியாவில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அதில் இரா.சம்பந்தன் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செயற்குழுக் கூட்டத்தில் இரா.சம்பந்தனின் பதவி விலகல் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படுமா என எழுப்பிய கேள்விக்கு மாவை சேனாதிராஜா பதில் அளிப்பதை தவிர்த்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.