சம்பந்தனை இழிவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் - கொதித்தெழுந்த சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்ற காணொளியொன்று தொடர்பாக சிறப்புரிமை கேள்வியை எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற ஊழியர்களின் உதவியுடன் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற ஆசனத்தில் வந்தமர்வதை உறுப்பினர் ஒருவர் காணொளி பதிவு செய்து வெளியிட்ட விடயமானது, சம்பந்தனின் சிறப்புரிமையை மீறும் விடயம் எனவும், இது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் கடந்த நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற ஊழியர்களின் உதவியுடன் தனது நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்ந்தார். இந்த காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளதோடு, அதனை Batti TV என்ற சமூகவலைத்தளத்தினூடாக பகிரப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எம்.ஏ சுமந்திரன், இரா. சம்பந்தனின் சிறப்புரிமையை மீறும் வகையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதுத் தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது முழங்காலிலுள்ள பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுவருகின்ற சம்பந்தன் நாடாளுமன்ற ஊழியர்களின் உதவியுடன் தனது நாடாளுமன்ற ஆசனத்தில் வந்தமர்வதை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணொளி பதிவு செய்து சமூகவலைத்தளத்தினூடாக பகிர்ந்திருக்கின்றார் நாடாளுமன்றத்திற்கு வருவதற்குக்கூட முடியாத தள்ளாடும் வயதில் பதவி ஆசையில் நாடாளுமன்ற உறுப்புரிமையை இன்னொருவருக்கு கொடுக்க முடியாமல் பெயருக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதென்பது சம்பந்தன் அவர்களுக்கு மக்கள் அளித்த வாக்குகள் வீணான வாக்குகளாகவே போயுள்ளது.” என பின்னணி குரல் ஒலிக்கிறது.
நான் நியாயமாக சிந்திக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பாக இந்த சிறப்புரிமை கேள்வியை எழுப்புகிறேன், இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பிரிமையை மீறுவதையும் தாண்டி ஓர் இழிவான செயலாகும். எனவே, காணொளி பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினரை அடையாளம் கண்டு அவருக்கு எதிராகவும் அதனை வெளியிட்ட "Batti TV" என்ற வலைத்தளம், பேஸ்புக் மற்றும் யூடியுப் பக்கங்களை நிர்வகிப்போருக்கு எதிராகவும் உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை நான் வலியுறுத்துகிறேன்.