இலங்கை கிரிக்கட் சபைக்கு புதிய தலைவரானார் எரான்! முக்கிய அங்கத்தவராக சங்கக்கார
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, புதிய இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) இடைக்காலக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவால் எரன் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, துஷிர ரடெல்லா, சிதத் வெட்டிமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாஃப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் டினால் பிலிப்ஸ் ஆகிய ஒன்பது பேர் கொண்ட இடைக்காலக் குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்க உள்ளனர்.
புதிய குழு
இதன்படி இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தங்களது பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

இதன்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக, விளையாட்டு அமைச்சு ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
1973-ஆம் ஆண்டின் 25-ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34-ஆம் பிரிவுகளின்படி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், நிர்வாக அமைப்பிற்குள் கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் விரைவில் ஒரு குழு நியமிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |