“கைது என்ற போர்வையில் கொடூரக் கொலை” காவல்துறை அதிகாரிக்கு சிறையிலேயே மரணிக்கும் தண்டனை
சாரா எவரார்டை (Sarah Everard) கைது என்ற போர்வையில் கடத்திச் சென்று கொலை செய்த பிரித்தானிய மெட்ரோ பொலிட்டன் காவல்துறை அதிகாரிக்கு ஆயுள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளியான கூசன்ஸ் சிறையிலேயே மரணிக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு மூலம் தங்களுக்கு நிம்மதி கிடைத்ததாக சாரா எவரார்டின் குடும்பத்தினர் கூறினார்.
தெற்கு லண்டனில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்ற 33 வயதான சாரா எவரார்டை, கடந்த மார்ச் 03 ஆம் திகதி வெய்ன் கூசன்ஸ் என்ற காவல்துறை அதிகாரி கடத்திச் சென்றிருந்தார்.
அதன்பின்னர் சாரா எவரார்டை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வெய்ன் கூசன்ஸ், அவரை கொலை செய்திருந்திருந்தார்.
இதனையடுத்து வெய்ன் கூசன்ஸ் காவல்துறையினாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
48 வயதான கூசன்ஸுக்கு ஆயுள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்ற தண்டனை தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர், இந்த வழக்கு "பேரழிவானதும் துயரமானதும் மற்றும் முற்றிலும் கொடூரமானதும்" என நீதிபதி கூறினார்.
கடத்தல், கற்பழிப்பு மற்றும் கொலை என "கோரமான விடயங்கள் என சுட்டிக்காட்டிய நீதிபதி கூசன்ஸ், தனது குடும்பத்தை "காட்டிக்கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் தீவிரமானது விதிவிலக்காக மிகவும் அதிகமானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, வாழ்நாள் முழுவதும் குற்றவாளியான வெய்ன் கூசன்ஸ் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.