அமைச்சர் சரத் வீரசேகர நிதானம் இழக்கின்றாரா? எழுப்பப்படும் கேள்வி
பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரவின் அண்மைக்கால செயற்பாடுகள் முஸ்லிம்கள் விடயத்தில் நிதானம் இழந்து செயற்படுகின்றாரா என்ற கேள்வியை எழுப்புவதாக கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி குறிப்பிட்டுள்ளார்.
இன்று(9) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்
கடந்த காலங்களில் பொலிஸ் துறையை நிர்வகித்த அமைச்சர்கள் சகவாழ்வு, புரிந்துணர்வு, இனநல்லிணக்கம் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வந்தனர்.
ஆனால் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர், சஹ்ரான் என்கின்ற கொலைகாரனால் முஸ்லிம் சமூகத்திற்கு சம்பந்தமே இல்லாமல் அரங்கேற்றப்பட்ட தற்கொலை தாக்குதலை வைத்துக்கொண்டு எந்த அடிப்படையும் இன்றி அப்பாவி முஸ்லிம் மக்களின் மத, கலாசார, பண்பாடுகள், உரிமை சார்ந்த விடயங்களில் கூடுதலான கரிசனை காட்டுவது ஒருவகை சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு பௌத்த மக்களிடமும் அரசாங்கத்திடமும் இருந்து முஸ்லிம்களை அன்னியப்படுத்தி பழி வாங்குகின்ற செயற்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளது.
முஸ்லிம்களின் ஆடை விடயங்கள், மதரஸாக்களை மூடுதல், பள்ளிகளை மூடுதல், தஃவா அமைப்புக்கள் மீதான தடை, முஸ்லிம் தலைவர்களின் கைதுகள் போன்ற தொடர் செயற்பாடுகள் அவ்வாறான ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு சான்றுகளாக அமைகின்றன.
இஸ்லாமியர்களின் மேற்குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளில் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ, இறைமைக்கோ, இன ஒற்றுமைக்கோ பாதகமாக அமையுமாக இருந்தால் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்து நெறிப்படுத்த வேண்டுமே அன்றி அவற்றைத் தடை செய்வதென்பது உரிமையை பறிக்கும் செயற்பாடே தவிர தீர்வாக அமையப் போவதில்லை.
எனவே இவ்வாறான விடயங்களில் நடுநிலையாக நிதானம் இழக்காமல் செயற்படுவது இந்நாட்டில் சகவாழ்வு புரிந்துணர்வு என்பவற்றை பலப்படுத்துவதோடு பௌத்த மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தூரத்தை குறைத்து அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.