விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை! திலீபன் நினைவேந்தலால் பொங்கி எழுந்த சரத் வீரசேகர
வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க அரசு அனுமதியளிக்குமா என சீற்றத்துடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கை
அவர் மேலும் கூறுகையில், "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைகள் தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்பட்டு வருவதுடன், பௌத்த சின்னங்களும் மரபுரிமைகளும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன.

வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் செயலாகும்.
இவ்வாறான சூழலில், எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசு அனுமதியளிக்குமா என்று நாம் கேட்கின்றோம்.
திலீபனின் உருவச்சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டுள்ளனர். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை ஏற்றுக்கொள்வாரா?
இவ்வாறான செயற்பாடுகள் ஊடாகப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாதம் விதைக்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக அரசு பாதுகாப்பு சார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்தி வருகின்றது. கடந்த நல்லாட்சி அரசும் இதேபோன்று செயற்பட்டதன் இறுதிக் கட்டமாகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
மேலும் அரசியல் வெற்றிகளுக்காகப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை எந்தக் காரணம் கொண்டும் அலட்சியப்படுத்த வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்." என்றார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |