மீண்டும் பற்றி எரிய ஆரம்பிக்கும் மத்திய கிழக்கு - எரிபொருள் நிலையங்கள் மீது கடும் வான்வழித் தாக்குதல்
யேமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகர் சனாவுக்கு மேற்கே அமைந்துள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் எரிபொருள் நிலையங்களைக் குறிவைத்து சவூதி தலைமையிலான கூட்டுப்படையினர் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
குறித்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு கூட்டுப்படையினர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சில மணி நேரங்களுக்குப் பின்னர் அப்பகுதிகளில் பலத்த வெடிப்புச் சத்தங்களுடன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தாக்குதலுக்கு உள்ளான எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் எரிபொருள் இருப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை என்றும் இதனால், பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என யேமன் எண்ணெய் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
தொடர்ச்சியாக ஏவுகணை
இதேவேளை ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் தம்மாமில் உள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல இலக்குகள் மீது ஹவுதி அமைப்பினர் தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரான் ஆதரவு ஹவுதிகள் அடுத்தடுத்து நடக்கும் இந்த தொடர் தாக்குதல்களில் இதுவரை அமெரிக்கர் ஒருவர் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு "மிகக் கடுமையான பதில் நடவடிக்கை" எடுக்கப்படும் என சவூதி அரேபியாவின் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் சல்மான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
யேமனுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் அமெரிக்கா ஈடுபட்டால் பதிலடி கொடுப்பது குறித்து நாங்கள் ஆலோசிக்க மாட்டோம், மாறாக அமெரிக்காவையும் பிராந்தியத்தில் உள்ள அதன் அனைத்து நலன்களையும் குறிவைத்து விரைவான மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஹவுதி அரசியல் குழு உறுப்பினர் முகமது அல் புகாரி ஐரோப்பிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |