பகிரங்கமாக அதிருப்தியை வெளியிட்டார் பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்
கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் மிகவும் அதிருப்தியுடனேயே தாம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி திஸாநாயக்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அமைச்சர்கள் சிலர் அரசாங்க செயற்பாடுகள் குறித்து பகிரங்கமாக விமர்சனம் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே தற்போது சிரேஸ்ட உறுப்பினரான திஸாநாயக்கவும் கடுமையான விமர்சனமொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.திஸாநாயக்க கொழும்பில் இன்றைய தினம் அவசர ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி பகிரங்கமாகவே தனது அதிருப்தியை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அமைச்சுப் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எனது சிரேஸ்டத்துவத்தை வைத்துக்கொண்டு நான் நாடாளுமன்றத்தின் பின்வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றேன்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் போன்று, முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவைப் போன்று நாடாளுமன்ற அரசியலிலும் நான் சிரேஸ்ட ஒருவராகவே இருக்கின்றேன்.
எமக்கிடையே இந்த அரசாங்கம் பற்றிய அதிருப்தி இருக்கின்றது. அதனால் தான் நான் பின்வரிசையில் உள்ளேன். எனினும் அது மிகவும் தோல்வி, கடும் கவலையென நினைக்கவில்லை.
அரசாங்கத்திற்குள் இருந்து அமைச்சுக்களை வகித்தபோது அந்த அனைத்து அமைச்சுக்களிலும் சாதனைகளைப் புரிந்திருக்கின்றேன். விவசாய அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு என அனைத்து அமைச்சுத்துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றேன். விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தான் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கிண்ணத்தை சுவீகரித்தோம். அந்த அளவுக்கு தற்போதைய எந்த அமைச்சரானாலும் செல்லமுடியாது. நாமல் ராஜபக்ச செல்வார் என எதிர்பார்க்கின்றோம்.
எனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்பது தவறு என்றாலும், நான் இன்னும் பின்னடையவில்லை.
தகுதியுடையவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லை என்று என்னால் கூறமுடியாது. எனக்கு கிடைக்கவில்லை என்பதையே தெரிவிக்கின்றேன். அமைச்சுப் பதவி கிடைத்தால் சிறப்பாக செய்துகாட்டுவேன் என்றார்.