பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்: மூன்று இளைஞர்கள் கைது!
கினிகத்தேன பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி, கினிகத்தேன – கோணவல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், அவரை சந்திக்கச் சென்ற சந்தர்ப்பங்களில் அவர் தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு காதலனும் அவரது நண்பனும் இணைந்து தன்னை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாகவும் காவல்துறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முறைப்பாடு
குறித்த மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வரும் நிலையில் கடந்த 17ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறி இரவு தாமதமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பாட்டி கினிகத்தேன காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மாணவி பல தடவைகள் தவறான நடத்தைக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக வைத்திய பரிசோதனைக்காக மாணவி நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் 16–17 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் 19 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, 2026 பெப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |