சிறிலங்கா காவல்துறைக்கு பயிற்சியளிப்பதை நிறுத்துங்கள் - ஸ்கொட்லாந்திடம் கோரிக்கை
சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுமதிக்கப்படுவதாக கூறப்படும் சித்திரவதைகள் நிரூபிக்கப்பட்டால், ஸ்கொட்லாந்து காவல்துறை சிறிலங்கா காவல்துறைக்கு பயிற்சியளிப்பதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாாி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவில் இருந்து தப்பிச்செல்கின்றவர்களால் சுமத்தப்படுகின்ற, குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை சிறப்பு அறிக்கையாளர் பேராசிரியர் மேன்ப்ரட் நொவெக் (Manfred Nowak) இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தில் இருந்து வெளியாகும் த சண்டே போஸ்ட் ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளிவந்த செய்திக்குறிப்பில், சிறிலங்காவில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகளால் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.
இந்த விசாரணைகளின் போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், ஸ்கொட்லாந்தின் தேசியப் படை, சிறிலங்கா காவல்துறை மற்றும் சிறப்புப் பிரிவுகளின் சர்ச்சைக்குரிய பயிற்சியை நிறுத்த வேண்டும்.
ஸ்கொட்லாந்தின் சர்வதேச காவல்துறை பயிற்சியானது உலகக் காவல்துறையை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது. எனினும் சிறுபான்மைத் தமிழர்களின் சித்திரவதை, கடத்தல் மற்றும் கொலைகளுக்கு உதவுகின்ற, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டும். ஸ்கொட்லாந்து காவல்துறையும் இந்தச் சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வேண்டுமென பேராசிரியா் மேன்ப்ரட் நொவெக் கோரியுள்ளார்.
சிறிலங்கா ஒத்துழைக்கவில்லை என்றால், அல்லது வழக்குத் தொடர முற்படவில்லை என்றால், இந்த விவகாரம் கடந்த காலங்களில் இருந்ததைப் போல சர்வதேச நீதிமன்றங்களுக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக த சண்டே போஸ்ட் தெரிவித்துள்ளது.