நிலக்கரி இறக்குமதியில் நடந்த ஊழல் - சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த தரப்பு
2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சி.ஐ.டியில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும், பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டண உயர்வு
நாட்டில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி விவகாரம் பேசும்பொருளாக மாறியுள்ளது.
இவ்வாறான பின்னணியில், நிலக்கரி இறக்குமதியில் இலங்கை மின்சார சபைக்கு சமீபத்தில் ஏற்பட்ட நஷ்டங்களே நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணிகளில் ஒன்று என இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி ஏற்றுமதியில் ஏற்பட்ட நஷ்டங்கள் இலங்கை மின்சார சபையின் இலாபங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கட்டண உயர்வைப் பரிந்துரைப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற நஷ்டங்களைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு நட்டம்
புத்தளம் - நுரைச்சோலையில் உள்ள லக்விஜய (Norochcholai Lakvijaya) நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான மற்றும் தரமான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதை உறுதிசெய்யும் தனது முதன்மைக் கடமையை எரிசக்தி அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தன.

நாட்டின் தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இத்தகைய பெரும் அலட்சியம், அமைச்சரின் பொறுப்பின் அடிப்படை மீறலாகும் என்றும் எதிர்க்கட்சிகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் எவ்வித ஊழலும் இடம்பெறவில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வந்த போதிலும், தணிக்கையாளர் நாயகத்தின் அறிக்கை வெளியானதன் பின்னர் அரசாங்கத் தரப்பினர் பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப் போயுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
அதேவேளை, அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் போது ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்துக்கு வந்து அரசாங்கத்தை தூய்மைப்படுத்துகிறார். தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிணைமுறி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தை காட்டிலும் தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |