கொரோனாவால் இறந்தவரின் உடலை இரகசியமாக அடக்கம் செய்ய முயற்சி
பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் சுகாதார துறையினருக்கு அறிவிக்காமல் வீட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் சடலத்தை அடக்கம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படடுள்ளது.
இந்நிலைநியில் நேற்று பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்தே, அதிகாரிகள் உடலை அடக்கம் செய்வதை தடுத்துள்ளதுடன், உடலை பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் வசித்து வந்த 75 வயதான அப்துல் ஹமீட் என்பர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அன்டிஜன் பரிசோதனை செய்து கொண்டுள்ளதுடன் அவருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர், நேற்றைய தினம் அதிகாலை வீட்டில் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது பற்றி உறவினர்கள் சுகாதார துறையினருக்கு அறிவித்திருக்கவில்லை.
இஸ்லாமிய சமய சம்பிரதாயத்தின்படி உடலை அடக்கம் செய்ய தயாராகிய போது, பிரதேசவாசிகள் அது குறித்து கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் பலாங்கொடை பொது சுகாதார ஊழியர்களுக்கு சம்பவம் பற்றி அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருப்பது அப்போது உறுதியாகியுள்ளது. அதிகாரிகள் உடலை பலாங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.