வெளிநாட்டவர்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் விசேட வேலைத்திட்டம்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் (Ministry of Public Security) பணிப்புரையின் பேரில் இலங்கை காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.
மத்திய கிழக்கு (Middle East) மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் (Eastern Europe) இராணுவ நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாப் பயணிகள்
இது தொடர்பில் காவல்துறை ஊடகப்பிரிவு இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் மரியாதையையும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரசாக, இந்த நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சி, அறிவு பெறுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கு தேவையான சூழலை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.
பதில் காவல்துறைமா அதிபர்
இதன்படி, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் இராணுவ நிலைமையை கருத்திற்கொண்டு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பின் ஆலோசனையை நடைமுறைப்படுத்த இலங்கை காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்தவுள்ளன.
காவல்துறை சுற்றுலாப் பிரிவு மேலும் பலப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய (Priyantha Weerasooriya) சகல காவல் நிலையங்களுக்கும் இது தொடர்பான விசேட அறிவுறுத்தல்களை வழங்குவார்.
பூர்வாங்க நடவடிக்கையாக, எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் இன்று முதல் பாதுகாப்பு தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 1997 இலங்கை காவல்துறை துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க பிரஜைகள் மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |