பலப்படுத்தப்பட்ட கோட்டாபயவின் பாதுகாப்பு!!
அரச தலைவரின் பாதுகாப்பு சம்பந்தமாக செயற்பட்டு வரும் அரச தலைவர் பாதுகாப்பு பிரிவின் உதவிக்கு, பிரதிப் காவல் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் ஆகியோர் மேலதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேஜர் ஜெனரல் செனரத் நிவூன்ஹெல்லவின் தலைமையின் கீழ் இயங்கும் அரச தலைவர் பாதுகாப்பு பிரிவின் நடவடிக்கைகளை காத்திரமாக மேற்கொள்ளும் வகையில் இந்த புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிக்குமார், இலங்கை மத்திய வங்கிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அரண்களை உடைத்துக்கொண்டு அரச தலைவர் மாளிகைக்குள் செல்ல முயற்சித்தமை உட்பட காவல்துறையினர் வழங்கி வரும் பாதுகாப்பு சம்பந்தமாக ஏற்பட்டுள்ள குறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், புத்தளம் மாவட்ட பிரதிப காவல் மா அதிபர் நிமல் பெரேரா, அரச தலைவர் பாதுகாப்பு பிரிவின் காவல் படையணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, புலனாய்வு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் பீ.டி.ஜயலால் உட்பட 100 காவல் புலனாய்வாளர்கள் அடங்கிய குழுவும் நேற்றைய தினம் அரச தலைவரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரச தலைவர் மாளிகைக்கு அருகில் கடந்த 3 ஆம் திகதி அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிக்குகள் முற்றுகையிட்டனர். இதனை காவல்துறையினரால், தடுக்க முடியாமல் போனமை தொடர்பாக பாதுகாப்பு பிரதானிகள் கடந்த 4 ஆம் திகதி கூடிய கலந்துரையாடியுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, காவல் மா அதிபர் சந்தன விக்ரமர்ன உட்பட பாதுகாப்பு பிரதானிகள் கலந்துக்கொண்டனர்.

