ஏமாற்றப்பட்டனரா ஈழத்தமிழர்கள்! விடுதலை புலிகளின் தலைவருடன் சீமான் இருக்கும் புகைப்படத்தால் சர்ச்சை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(Seeman) விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என இந்திய திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக வேலை செய்து வந்தேன்.
எடிட் செய்த புகைப்படம்
அப்போது, நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த செங்கோட்டையன், சீமான் உடன் நெருக்கமாக இருந்தவர். நான் அவருக்கு சில படங்களை எடிட் செய்து கொடுத்துள்ளேன்.
அப்படி ஒருமுறை டிவிடிகளை கொண்டு வந்து கொடுத்து, சீமான், பிரபாகரன் இருவரும் அருகருகே இருப்பது போல படம் வேண்டும் என்று கேட்டார். நான் எதற்கு என்று கேட்டதற்கு, "நாங்கள் அவருக்கு சர்ப்ரைஸாக பரிசு கொடுப்பதற்காக இந்த புகைப்படம் வேண்டும்" என்று சொன்னார்.
என்னால் முடிந்த அளவுக்கு அந்த படத்தை எடிட் செய்து இருவரையும் அருகருகே இருப்பதுபோல சேர்த்துக் கொடுத்தேன்.
பிற்காலத்தில் சீமான், பிரபாகரனை சந்தித்ததாக வேறு வேறு தகவல்களுடன் உலா வரும்போது செங்கோட்டையனை இதுபற்றி சந்தித்து கேட்டேன்.
நம் புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவர் உருவாகிவிட்டார் என சந்தோஷமாக கூறினார். ஆனால், அதே காலகட்டத்திலேயே, இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்ற தகவலும் பரவியது. ஆனால், இதுவரை நான் யாரிடமும் இதை சொன்னதில்லை.
உண்மைக்கு முரணான தகவல்கள்
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல தற்போது கிடைக்கும் புகைப்படம் நான் உருவாக்கியது. இது தவிர பிரபாகரனுடன் சீமான் இருப்பதுபோல வேறு புகைப்படம் எதுவும் இணையத்தில் எங்குமே இல்லை.
சீமான் பிரபாகரனை சந்தித்தாரா? அப்போது புகைப்படம் எடுத்தாரா? இல்லை சந்திக்கும்போது புகைப்படம் எடுக்கவில்லையா என்பது பற்றி நான் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.
பிரபாகரன் பெயரையே யாரும் உச்சரிக்காத சூழலில் நான் வந்தபிறகுதான் இங்கு பிரபாகரன் பெயரை உச்சரிக்கும் சூழல் உருவானது என சீமான் சொல்கிறார்.
அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்ற முறையில் நான் சங்கடப்பட்டிருக்கிறேன். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சீமான் சொல்லும் நிறைய தகவல்கள் உண்மைக்கு முரணானதாக இருக்கும்." என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |