சிறிலங்காவிலும் அதிர்வலையை ஏற்படுத்திய பண்டோரா சர்ச்சை- நாடாளுமன்றில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
உலக நாடுகளை மாத்திரமன்றி இலங்கையிலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் பண்டோரா ஆவண சர்ச்சை குறித்து விசாரணை செய்ய தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும்படி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்திலுள்ள பிரதான பங்காளிக்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அதேபோல பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து இந்தக் கோரிக்கையை இன்றைய தினம் விடுத்திருக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரியான நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் சம்பந்தப்பட்டதாக வெளியான பண்டோரா ஆவணம் குறித்த விசாரணை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டு வருகின்றது.
எனினும் இந்த விசாரணைகளை முன்னெடுக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றையும் நியமிக்கும்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது கோரிக்கை முன்வைத்தார்.
பண்டோரா ஆவணம் பற்றி அதிகளவு பேசப்பட்டு வருகின்ற நிலையில், அதுகுறித்து விசாரணை செய்ய தெரிவுக்குழு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் தொடர்பில்லை என்றும் தொடர்பிருப்பதாகவும் கூறுபவர்களுக்கு தெரிவுக்குழு விசாரணையில் முன்னிலையாகி சாட்சியங்களை அளிக்கவும் சந்தர்ப்பம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கைக்கு ஆதரவளித்துப் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.