பிமல் ரத்நாயக்கவுக்கு என்ன யோக்கியம் உள்ளது: கடுமையாக சாடிய செல்வம் எம்.பி
தமிழ்த் தலைமைகள் பற்றி பேசுவதற்கு பிமல் ரத்நாயக்கவுக்கு என்ன யோக்கியம் உள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் ஏன் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் வினவியுள்ளார்.
மன்னாரில் இன்று (22) இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜே.வி.பி.அரசாங்கம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஜனாதிபதி கடந்த வாரம் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மன்னார் வருகை தந்து உரை நிகழ்த்தினார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது உள்ளுராட்சி சபைகளை ஆட்சி அமைப்பது தமது கட்சியாக மாத்திரம் இருந்தால் எவ்வித பாரபட்சம் இன்றி நிதியை ஒதுக்குவதாக தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றி மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதே அவரின் செய்தியாக உள்ளது.
அவரது கருத்தை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்த்தார்கள்.இலஞ்சத்தை கொடுத்து ஜனாதிபதி மக்களை ஏமாற்றுகிறார்.
விமல் ரத்நாயக்கவின் கருத்து
எனவே ஜனாதிபதி அவர்கள் எவ்வாறு இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும். ஜனாதிபதிக்கு ஆதரவாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஒரு படி குரலை உயர்த்தி கூறுகிறார்.
ஜனாதிபதியினுடைய கூற்றிற்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் அருகதையற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஜனாதிபதியின் கட்சிக்கு அதிக அளவான ஆசனங்களை வடக்கு மக்கள் வழங்கி உள்ளனர்.
அதை வைத்துக் கொண்டு தமிழ்த் தலைமைகள் பேசுவதற்கு வல்லமை அற்றவர்கள் என்று சொல்லுவதற்கு பிமல் ரத்நாயக்கவுக்கு என்ன யோக்கியம் உள்ளது என்று நான் கேட்க விரும்புகின்றேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
