குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர்களுக்கான விசேட அறிவிப்பு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர்களுக்கு அராங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவித்தொகையை தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் பெற்றுக்கொள்ள முடியாமலுள்ளது.
இந்த நிலையில் குறித்த சிரேஷ்ட பிரஜைகளுக்காக விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் திட்டமானது, கிராமிய வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் உள்ள தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.
5,000 ரூபாய் உதவித்தொகை
தற்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள முதியவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் உதவித்தொகையை அரசாங்கம் வழங்கி வருகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 10 இலட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியுள்ளவர்களில் சுமார் 76,716 பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் இந்த உதவித்தொகையைப் பெற முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகவே இந்த விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் தேசிய முதியோர் செயலகம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
தேசிய அடையாள அட்டை இல்லாததால் உதவித்தொகை பெற முடியாத முதியவர்கள், உடனடியாகத் தமது கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் அல்லது முதியோர் உரிமைகள் அபிவிருத்தி உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
வங்கிக் கணக்குகள்
தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களை விரைவில் இந்த உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்காக, மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், சமூக சக்தி அமைப்புகள் மற்றும் சமூக அபிவிருத்தி குழுக்களின் ஊடாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

உதவித்தொகை பெறுவதில் நிலவும் இவ்வாறான தடைகளை நீக்கி, தகுதியுள்ள அனைத்து முதியவர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசு இந்த உதவித்தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையை ஒரு மில்லியனாக விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
தற்போது, அஸ்வெசும திட்டத்தின் வங்கிக் கணக்குகள் மூலம் 698,790 மூத்த குடிமக்களுக்கு இந்த உதவித்தொகை விநியோகிக்கப்பட்டு வருவதுடன் மேலும் 232,496 பயனாளிகள் தபால் நிலையங்கள் மூலம் இந்தத் தொகையைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்