அமைதி வழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உயிராபத்து - வெளியான பரபரப்பு தகவல்!
"நாட்டில் ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருவதாகவும், அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த மக்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது."
இந்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் நிகேஷல மீது கடுவலை முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தாக்கியவர்கள் என இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தல்
"போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாகவும், அவர்களை கவனமாக இருக்குமாறும் பல்வேறு அச்சுறுத்தல் ரீதியிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் சகலரும் தாக்குதல்களுக்கும், உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர்.
அத்துடன், இப்போராட்டத்தின் பக்கவிளைவுகளின் பயனாகவே தற்போதைய அதிபரும் பதவிக்கு வந்துள்ளதால், அவர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியே நேற்றைய தாக்குதலுமாகும் எனக் கூறப்படுகிறது.
எனவே, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் தலையிட வேண்டும்." இவ்வாறு, மேற்குறிப்பிட்ட விடயங்களை நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (11) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
