கடுமையான அரசியல் அழுத்தம் -மற்றுமொரு அரச அதிகாரி பதவி விலகுகிறார்
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
வரும் செவ்வாய்க்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சர் லசந்த அழகியவன்னாவிடம் ஒப்படைக்க முடிவு செய்ததாக துஷான் குணவர்தன சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் அவரால் கடமைகளை சுயாதீனமாக மேற்கொள்ள முடியாததால், பதவி விலகுவதாகவும் அவர் கூறினார்.
பல சம்பவங்கள் தொடர்பில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இதனையடுத்து தான் பதவி விலக முடிவெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
சீனி மற்றும் சில பொருட்கள் உட்பட பல நுகர்பொருட்கள் நாட்டிலிருந்து கடத்தப்படுவதாகவும், ச தொ ச வால் இறக்குமதி செய்யப்பட்ட பூடு வேறொரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டு திரும்ப வாங்கப்பட்டதாகவும் கூறினார். கைது செய்யப்பட்ட நபர் மற்றும் அவருக்கு மேலானவர்கள் கூட இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்றும், மக்கள் இதை மறந்துவிட்ட பிறகு இது தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தானும் ஒரு அரசியல் நியமனத்தால் வந்திருந்தாலும், முடிந்தவரை மோசடி மற்றும் ஊழலைத் தடுக்க முயன்றதாக தெரிவித்தார்.
ஆனால் சில அரசியல்வாதிகளுடன் தன்னால் அவ்வாறு செய்ய முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் பதவியில் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.