எருமை மாடு போல் அமைச்சர்கள் - நத்தார் பாப்பா போல ஜனாதிபதி - சீண்டும் சாணக்கியன்
மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுரகுமார திசாநாயக்க மாறியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
சில எருமை மாடுகளைப் போல் உள்ள அமைச்சர்கள் தான் ஜனாதிபதியை நத்தார் பாப்பா போல இழுத்துக் கொண்டு செல்கின்றார்கள் என்றும் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராஜா விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறுகின்றார்
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இந்த நாட்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறுகின்றார் என்று நாட்டின் தேர்தல் ஆணைக்குழு கடிதம் எழுதிய முதலாவது சந்தர்ப்பம் இந்த தேர்தலில்தான் நடைபெற்றுள்ளது.
ஒரு நாட்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறுகின்றார், தேர்தல் சட்டங்களை மீறுவதை நிறுத்துங்கள் என்று ஜனாதிபதி ஒருவருக்கு கடிதம் எழுதிய சந்தர்ப்பம் 2025ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலிலேயே நடைபெற்றுள்ளது.
தற்போது கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் பண்டிகை வருகின்றது. ஆனால் ஜனாதிபதி ஈஸ்டர் பண்டிகையினை நத்தார் பண்டிகை வருகின்றது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றாரோ தெரியாது. ஏன்னென்றால் நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் காலப்பகுதியில் நத்தார் பாப்பா வருவார், அவர் குழந்தைகளுக்கு பரிசுகள் எல்லாம் வழங்குவார்.
நத்தார் பாப்பா திரிவது போன்றுதான் இன்று ஜனாதிபதி வடகிழக்கு முழுவதும் திரிகின்றார். நத்தார் பாப்பாக மாறிவிட்ட அநுர குமார திசாநாயக்க கூறுகின்றார் மன்னாரையும் புத்தளத்தினையும் இணைக்கும் வீதியை உடனடியாக செய்யப் போகின்றேன் என்று.
உள்ளுராட்சிமன்ற தேர்தல்
வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது உங்களுக்கு தெரியாதா மன்னார் புத்தளம் வீதியை அமைக்கவேண்டும் என்று உள்ளுராட்சிமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் நத்தார் பாப்பாவாக மாறிய பின்னர்தானா உங்களுக்கு தெரியவந்தது.
ஜனாதிபதியின் சொந்த ஊரில் புகையிரதம் ஒன்றை அமைப்பதற்காக ஆய்வு செய்வதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மன்னார் - புத்தளம் வீதியை அமைப்பதற்கான ஆய்வு செய்வதற்கு ஒரு 10 மில்லியன் ரூபாவினை அவர் ஒதுக்கியிருந்தால் அவர் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.
இவை அனைத்தும் தேர்தலுக்காக வழங்கப்படும் போலியான வாக்குறுதிகள். சில எருமை மாடுகளைப் போல் உள்ள அமைச்சர்கள்தான் ஜனாதிபதியை நத்தார் பாப்பா போல இழுத்துக்கொண்டு செல்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் மைதானம்
இன்னும் ஒரு கருத்தினையும் ஜனாதிபதி கூறியிருந்தார். சனத் ஜயசூரியவிடம் சொன்னாராம் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கட் மைதானத்தை உருவாக்குங்கள் என்று. அவ்வாறானால் சனத் ஜயசூரிய நாட்டின் ஜனாதிபதியா? அல்லது அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியா?
இந்திய பிரதமர் இலங்கை வந்தபோது 1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தினை கைப்பற்றிய இலங்கை அணியை சந்தித்திருந்தார். அதன்போது சனத் ஜயசூரிய வடக்கில் ஒரு சர்வதேச கிரிக்கட் மைதானத்தினை அமைக்கவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.
நத்தார் பாப்பா என்றால் தங்களின் பரிசினையே வழங்கவேண்டும். மற்றவரின் பரிசினை களவெடுத்துக் கொடுப்பவராக இன்று அநுரகுமார திசாநாயக்க மாறியுள்ளார். இதுதான் இந்த நாட்டின் நிலைமை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
