சிரிலிய விவகாரம்... ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு : காவல்துறையின் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலைகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
'சிரிலிய சவிய' கணக்கு தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கணக்கு தொடர்பான விசாரணைகளை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும், அதனடிப்படையில் செப்டெம்பர் 24 அன்று அவரை முன்னிலையாகுமாறு கோரி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
விமான நிலையத்தில் கையளிக்கப்பட்ட அறிவித்தல்
இந்த அறிவித்தல் ஆரம்பத்தில் தங்காலையில் உள்ள அவரது இல்லமான 'கார்ல்டன் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், அக்காலப்பகுதியில் அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று தனது சிகிச்சையை நிறைவு செய்த ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்காக மருத்துவமனையிலிருந்து நேரடியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார்.

அங்கு வைத்து, செப்டெம்பர் 24 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையாகுமாறு தெரிவிக்கும் அறிவித்தலை அதிகாரிகள் அவரிடம் கையளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அறிவித்தலை அவரது உறவினர் ஒருவர் அவருக்குப் பதிலாகப் பெற்றுக்கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (16) அதிகாலை ஒரு சாதாரணப் பயணியாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |