இடமாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச: மகிந்த ராஜபக்ச தரப்பு தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து நவலோகா தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே, ஷிரந்தி ராஜபக்ச தற்போது தனியார் வைத்தியசாலையில் தனது வழக்கமான வைத்தியரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
'சிரிலிய சவிய' கணக்கு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார்.
நவலோகா தனியார் வைத்தியசாலை
இதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 16ஆம் திகதி குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், அவர் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாதாரண சிகிச்சைப் பிரிவு
மருத்துவ அறிக்கையைப் பரிசீலித்த நீதவான், ஷிரந்தி ராஜபக்சவைப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

இதனையடுத்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் நவலோகா தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |