நெருங்கிய நண்பர்களாலேயே புதின் கொல்லப்படுவார் - உக்ரைன் அதிபர் அதிர்ச்சி தகவல்
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிராக அந்நாடு மீது ரஷியா படையெடுத்து ஓராண்டை கடந்துள்ளது.
இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின் விரைவில் கொலை செய்யப்படுவார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்த நிலையில், இரு நாடுகளும் தனது போர் விவகாரங்களை வலுப்படுத்தகி வருகின்றனர். தொடக்கத்தில் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய போதிலும், அதன் பின்னர் உக்ரைன் கொடுத்த பதிலடியில் ரஷ்யா படைகள் பின்வாங்கின.
ரஷ்யாவுக்கு எதிராக
இதனால் கைப்பற்றிய பகுதிகளையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே பல உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டன. இதனால் உலக நாடுகளிடம் இருந்து ரஷ்யா தனித்துவிடப்பட்டது. சீனா, சிரியா உள்ளிட்ட நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவே உள்ளது.
இதனால் ரஷ்யா சிக்கலான சூழலில் இருக்கிறது. போரிலும் ரஷ்யாவுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. பல இடங்களில் ரஷ்யா பின்னடைவை சந்தித்து வருகிறது. மறுபுறம் உக்ரைனுக்கு ஆதரவாகப் பல உலக நாடுகள் உள்ளன.
உக்ரைனிற்கு ஆதரவு
உக்ரைனுக்கு அவர்கள் தொடர்ச்சியாக ஆயுதங்களையும் வழங்கி வருகின்றனர். அமெரிக்க அதிபர் தொடங்கிப் பல முக்கிய தலைவர்கள் நேரடியாக உக்ரைன் நாட்டிற்குச் சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேற்குலக நாடுகளின் ஆதரவு இருப்பதால், ஆயுதங்களும் உக்ரைனுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இதன் காரணமாகவே உலகின் மிகப் பெரிய இராணுவங்களில் ஒன்றான ரஷ்யாவைக் கடந்த ஓராண்டாக அவர்களால் சமாளிக்க முடிந்தது.
இது எல்லாம் ஒரு பக்கம் நடந்து வந்தாலும் கூட ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து அவ்வப்போது பகீர் தகவல்கள் வெளியாகி வந்தன. தொடர் சிகிச்சை இருக்கும் போதிலும், அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
விரைவில் பலவீனமடையும்
இந்தச் சூழலில் புதின் மிக விரைவில் கொல்லப்படுவார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு வெளியான உக்ரைன் ஆவணப்படத்தில் அவர் இந்த கருத்துகளைக் கூறியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய அதிபர் புதின் தலைமை விரைவில் பலவீனமடையும் என்றும் இது அவரது நெருங்கிய சகாக்களையே அவருக்கு எதிராகச் செயல்படத் தூண்டும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "புதின் பலவீனமாக இருப்பது விரைவில் ஒரு காலம் ரஷ்யா முழுக்க உணரப்படும். அப்போது வேட்டைக்காரனை மற்றொரு வேட்டைக்காரன் வேட்டையாடுவான். அவரை கொல்ல அவர்கள் ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள். இது நடக்குமா என்று கேட்டால்.. நிச்சயம் நடக்கும்.. ஆனால், எப்போது நடக்கும் என்று எனக்குத் தெரியாது" என்று அவர் தெரிவித்தார்.
சகாக்கள் அதிருப்தி
புதினின் நெருங்கிய சகாக்களுக்கே அவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக ரஷ்யாவில் இருந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உக்ரைன் போர்க் களத்தில் இருக்கும் ரஷ்ய வீரர்கள் நம்பிக்கையில்லாமலும் அழுகும் வகையிலும் காணொளிகள் வெளியாகி இருந்தன.
இந்த காணொளிகள் எல்லாம் ரஷ்யாவால் போரில் வெல்ல முடியாது என்ற அந்நாட்டு வீரர்களை நினைக்க ஆரம்பித்துவிட்டதைப் போல இருக்கிறது. இதுவே ரஷ்ய அதிபர் புதின் மீது அவரது சகாக்கள் அதிருப்தியடையக் காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிரிமியா தீபகற்பம் மீண்டும் உக்ரைன் உடன் இணைவதே உக்ரைன் போரின் முடிவாக இருக்கும் என்றும் ஜெலென்ஸ்கி தெரித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு இதேபோல உக்ரைன் பகுதிக்குள் ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்தன.
அப்போது உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி இணைத்து கொண்டது.
அப்போது முதலே கிரிமியா தீபகற்பத்தையும் ரஷ்யாவிடம் இருந்து மீட்க உக்ரைன் போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.
