காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
கொழும்பு (Colombo) - மாலபே காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மாலபே காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹோகந்தர, விஸ்கம் மாவத்தையில் நேற்றிரவு (23) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றிரவு மாலபே காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று, சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, மோட்டார் வாகனம் ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு
இதன்போது குறித்த மோட்டார் வாகனம், திடீரென பின்னோக்கி பயணித்துள்ள நிலையில், காவல்துறை அதிகாரி அதன் சக்கரங்களில் ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின்னர் மோட்டார் வாகனம் அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதி நின்றுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.800 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இருவர் கைது
பின்னர், போதைப்பொருட்களை கொண்டு சென்ற 30 வயதான ஆண் ஒருவரும், 33 வயதான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தெல்கொட பகுதியில் வசிக்கும் கணவன், மனைவி என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையின் போது, சந்தேகநபர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ கிராம் கேரள கஞ்சாவும், அதனை அளவிட பயன்படுத்தப்பட்ட தராசும் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மாலபே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்