மெக்சிக்கோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் பலி
வடக்கு மெக்சிகோவில் நேற்று (29) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 26 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மெக்சிகோவில் உள்ள சோனோரா மாகாணத்தின் சியுடாட் ஒப்ரெகன் நகரில் இடம்பெற்ற 15 வயது சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலேயே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6 பேர் பலி 26 பேர் படுகாயம்
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இடைநடுவே வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 26 பேர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் 2 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
காவல்துறையினர் தேடுதல்
சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தினால் பல்வேறு பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சோனோரா மாகாணத்தில் போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மெக்சிக்கோவில், கடந்த 17ஆம் திகதி கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |