தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர் அதிரடியாக கைது
மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித தலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று (18) இரவு 7 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பாக மனம்பிடிய காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கைது
அத்துடன், துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடையவர் எனவும் மனம்பிடிய, பிரதான வீதியில் வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனினும் தேவாலயத்தின் ஜன்னல் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சந்தேக நபர் தேவாலயத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் பாதைக்கு சென்று இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவாலயத்தின் பாதிரியாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், மனம்பிடிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
