நாடாளுமன்றில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சிறீதரன் எம்.பி
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய (06.02.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்ட அவர் விவசாய அமைச்சர் கே.டீ. லால்காந்தவிடம் (K. D. Lalkantha) சில கேள்விகளையும் முன்வைத்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இலங்கை மக்களின் பிரதான தொழில் விவசாயம். அதிலும் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் இதனையே பிரதானமாக கொண்ட மாவட்டங்களும் உண்டு.
2024 - 2025 காலப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
தங்களிடமிருந்த கையிருப்புக்களை வைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பருவ கால நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இந்த பாதிப்பினால் கையறு நிலைக்கு வந்துள்ளனர்.
பலர் அடுத்த சிறுபோக நெற்செய்கை பற்றி சிந்திக்க முடியாமல் நட்டமடைந்துள்ள நிலையில் தம்மை தூக்கி விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
1.நாடு பூராகவும் வெள்ளத்தால் அழிவடைந்த நெல் விவசாய நிலங்களின் அளவு எவ்வளவு?
2.எத்தனை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்?
3. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு, காப்புறுதி அல்லது நிவாரணம் வழங்கும் திட்டம் ஏதாவது அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளதா?
4. வடக்கு கிழக்கில் எத்தனை ஏக்கர் நெல் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன? அதற்கான நிவாரணத் திட்டம் யாது?
என்ற கேள்விகளை சபையில் முன்வைத்ததுடன், நெல்லுக்கான உத்தரவாத நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் ஜனவரி மாதமே அறுவடை ஆரம்பமாகியுள்ளது என சுட்டிக்காட்டினார்.
நெல்லுக்கான நட்டஈட்டை வழங்குபவர்கள் தங்களுடைய சுற்றுநிருபத்திற்கு அமைய செயற்படுவதாகவும் விண்ணப்பங்கள் வழங்கும் நடவடிக்கையை கிளிநொச்சியில் நிறுத்தியிருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.
விண்ணப்ப படிவங்களையாவது உடனடியாக வழங்கி விவசாயிகளின் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |