ஆடைகளின்றி அடித்து நொருக்கப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள் : சிறீதரன் பகிரங்கம்
செம்மணி மனிதப் புதைகுழியில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மிக மோசமாக அடித்து நொருக்கப்பட்டு சிறு துணி கூட இல்லாமல் புதைக்கப்பட்டுள்ள நிலை என்பது மிகக் கொடூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்துக்களோ கிறிஸ்தவர்களோ உடல்களை அடக்கம் செய்கின்ற போது அதற்குரிய முறைகளுடன் தான் அடக்கம் செய்வார்கள் எனவும் ஆனால் இங்கு ஒரு நேர்த்தியான முறையின்றி உடல்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ் நீதவான் நீதிமன்ற நீதவானின் அனுமதியின் பிரகாரம் சிவஞானம் சிறீதரன் இன்று (01) காலை செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தோண்டும் பணியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இங்கு நிலமட்டத்திலிருந்து அரை அடி ஆழத்தில் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.
1995 முதல் 2001 ஆம் ஆண்டு வரை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த இந்தப் பகுதியில் பாரியளவு இராணுவ முகாம்களே காணப்பட்டன. இவ்வாறான இடத்தில் வேறு யாரும் மனித உடலங்களை புதைப்பதற்கு வாய்ப்பில்லை.
இது தமிழர்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் வடிவங்களை இந்த இடத்தில் காண முடிகின்றது.
இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த புதைகுழி ஆய்விற்காக உலகத்திலுள்ள தொழில்நுடபங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா
