பிரஜா சக்திக்கு எதிராக யாழில் ஆரம்பமாகவுள்ள கையெழுத்து போராட்டம்!
பிரஜா சக்தி என்பது ஜேவிபி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது எனவும் பிரஜா சக்திக்கு எதிராக தமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர சபை உறுப்பினருமான அ.நிசாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (16.01.2026) யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரஜா சக்தி
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை ஜேவிபி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அந்தப் பிரஜா சக்தியில் தமது கட்சியின் நேரடி உறுப்பினர்களை அல்லது விசுவாசிகளை ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற வட்டாரங்களிலும் நியமித்துள்ளார்கள்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் வேறு தேர்தல்களை இலக்காக கொண்டும், கட்சியை வளர்ப்பதை நோக்காகக் கொண்டும் இந்த பிரஜா சக்தி ஆரம்பிக்கப்பட்டது. ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எண்ணக்கருவிலேயே இந்த பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது. ஆகையால் இந்தப் பிரஜா சக்தி திட்டத்தினை நான் வன்மையாக எதிர்க்கின்றேன்.
பிரஜா சக்தி என்பது இந்த அரசையும் தாண்டி ஒருபடி மேலே வந்துள்ளது.
அரசாங்கத்தின் பிரதேச செயலகளின் கீழுள்ள கிராம சேவகர்களே இதுவரை அந்த கிராமத்தின் தேவைகளான வீடு, காணி, உணவுத் தேவை, வறுமை, வாழ்வாதாரம் போன்ற விடயங்களை அரசாங்கத்தின் உதவி மூலம் பெற்றுக் கொடுப்பார்கள். ஆனால் அதை மழுங்கடிக்கும் வகையில் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டுள்ளது.
NPP என்பதை தாண்டி ஜேவிபியானது இன்று வடக்கு கிழக்கிலே மையம் கொண்டுள்ளது. ஜேவிபி தமது கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் அடிப்படையிலேயே இந்த பிரஜா சக்தி ஆரம்பிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகளின் காலத்தில் சுனாமி ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவும் இணைந்து ஒரு சுனாமி கட்டமைப்பை உருவாக்க பேச்சுவார்த்தைகளை நடாத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தயாரானார்கள்.

இதன்போது இன்று ஆட்சி செய்கின்ற ஜேவிபியினர் அன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அதாவது, அரசாங்கமானது தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புடன் எந்த விதமான உடன்படிக்கையையும் மேற்கொள்ள முடியாது.அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய முடியாது என்று வழக்கு மூலம் சுனாமி கட்டமைப்பை தடுத்தார்கள்.
இன்று நான் கேட்கிறேன், பிரதேச செயலர் தலைமையிலான கட்டமைப்பின் கீழ் கிராம சேவகர்கள் இருக்கின்ற நிலையில், அரச கட்டமைப்புக்கு நிகரான இன்னுமொரு கட்டமைப்பான பிரஜா சக்தியை உருவாக்கி அரசாங்க கட்டமைப்பை மீறியிருக்கின்றார்கள். பிரஜா சக்தியை வடக்கு-கிழக்கில் நாங்கள் அனுமதிக்க முடியாது.
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் இது தொடர்பாக ஒரு தெளிவான அறிவிப்பை விடுத்து பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மையில் அது பாராட்டத்தக்க விடயம்.
பிரஜா சக்திக்கு எதிராக மாநகர சபைக்கு உட்பட்ட எனது வட்டாரத்திலிருந்து கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க உள்ளேன். மேலும் இந்த கையெழுத்துப் போராட்டத்தை ஏனைய பிரதேச சபைகளுக்கும் கொண்டு செல்ல உள்ளேன். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |