சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் : எதிர்க்கட்சியின் முடிவு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு (Jagath Wickramaratne) எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையொப்பமிடும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரைவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்தமை உட்பட பல விடயங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
சட்டமா அதிபர் மற்றும் நாடாளுமன்ற செயலகம் சபாநாயகருக்கு சமர்ப்பித்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உண்மைகளை புறக்கணித்து, சபாநாயகர் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தொடர்வதற்கு எந்த தடையும் இல்லை என்பதை இந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டினாலும், அந்த அனைத்து விடயங்களையும் புறக்கணித்து சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுவது கடுமையான அநீதி என்றும் தெரிவித்தார்.
சபாநாயகரின் நடவடிக்கைகள் காரணமாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் கடுமையான அநீதிகளை எதிர்கொண்டுள்ளதால், எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
