மக்களை பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ள வரவுசெலவுத் திட்டம்- கடும் விசனம் வெளியிட்டுள்ள சிங்கள ராவய!.. (காணொளி)
நாட்டு மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என சிங்க ராவய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டு மக்கள் தமது பிரச்சனைக்கு தீர்வாக புதிய ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் அமையும் என எதிர்பார்த்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் ஜீவனோபாயமாகக் காணப்படும் விவசாயத்தை வலுப்பெறச் செய்யும் வேலைத்திட்டங்கள் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில் ஊழியர்களுக்கான ஊதிய அதிகரிப்பு இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டிய அவர், இது பாரிய பிரச்சினை எனவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் இன்று வாழ முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத் திட்டம் மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளதாக நாம் பார்க்கிறோம். கொரோனா காரணமாக உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பாரிய வீழ்ச்சியினைக் கண்டுள்ள போதிலும் இலங்கை அதனை சமாளித்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டிற்கு பாரியளவில் வருமானத்தைத் தரும் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.