தூக்கிலிடப்பட்டார் மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி: திடீரென முடிவை மாற்றிய சிங்கப்பூர் அரசு
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக அவரது தண்டனை ஒத்தி வைக்க முடிவு செய்த போதிலும், நேற்று மாலை (25) சிங்கப்பூர் நீதிமன்ற பணிப்புரையின் கீழ் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
போதைப்பொருளுடன் கைது
கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகிதி மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தட்சிணாமூர்த்தி காத்தையாயும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்மணியும் 44.96 கிராம் டயாமார்ஃபைன் எனும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தலில் தபால் சேவையைப் போல் (courier) செயற்படக்கூடியவர்களுக்கு, கடத்தலில் குறைந்தபட்ச பொறுப்பு கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது.
இல்லையெனில், போதைப்பொருள் கடத்தலுக்கு உலக அளவில் மிகக் கடுமையான தண்டனையைத் தரும் சிங்கப்பூர் சட்டங்களில் இருந்து தப்பிக்க இயலாது.
கடந்த 2015 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட தட்சிணாமூர்த்தி காத்தையாயும் கிறிஸ்டின் ஜெயமணியும் குற்றவாளிகள் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், கிறிஸ்டின் ஜெயமணி வெறும் தபால் சேவையைப் போல் செயற்பட்டதால் மரண தண்டனையில் இருந்து தப்பித்தார். அவருக்கு பிரம்படி அல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு மணி நேரத்திற்குள் அவரது உடல்
அதன் பின்னர், தட்சிணாமூர்த்தி காத்தையா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அவருக்கு பலனளிக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில், வியாழக்கிழமை அதிகாலையில் நிறைவேற்றப்பட வேண்டிய மரண தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் கே.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
எனினும் சில மணி நேரங்களுக்கு பிறகு சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் முடிவை மாற்றியமைத்து மரண தண்டனை தொடரும் என்றும் இரண்டு மணி நேரத்திற்குள் அவரது உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டதாக வழக்கறிஞர் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் தள்ளுபடியானதாக சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
