யாழ். வேலணை பொது நினைவிடத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல்!
புதிய இணைப்பு
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று (26.09.2025) தீவக நினைவேந்தல் குழுவினரால் வேலணை வங்களாவடி பொது நினைவிடத்தில் நினைவுகூர்ந்து நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து தனது உயிரை துறந்த தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டின் இறுதி நாள் நினைவு நிகழ்வு இன்றாகும்.
தியாகி திலீபனின் இறுதிநாள் நிகழ்வுகளின் ஓர் அங்கமாக வங்களாவடியில் உள்ள பொது நினைவு தூபியில் காலை 8 .30 மணிமுதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வேலணை மக்களால் நினைவேந்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தியாகி திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மலர் அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன், மாநகரின் முன்னாள் உறுப்பினர் பார்த்தீன், தழிழரசுக் கட்சியின் மறைத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன், வேலணை பிரதேச சபையின் உப தவிசாளர் வசந்தகுமாரன், உறுப்பினர்களான பிரகலாதன், கார்த்தீபன், நாவலன், ஞானரூபன் உள்ளிட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழர் தேசத்திற்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழில் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவாலயத்தில் இன்று (26) காலை 8 மணிமுதல் அடையாள உண்ணா விரதத்துடன் வடமராட்சி மக்களால் நினைவேந்தப்பட்டது.
இதன்போது பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தியாகி திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
மலர் அஞ்சலி
அதனை தொடர்ந்து நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களால் மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மதகுருமார்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினால் வழங்கப்பட்ட பயன்தரு மரக்கன்றுகள் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

