திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
புதிய இணைப்பு
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (26) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை ,சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து பொதுச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நினைப்பேருரைகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து தியாக தீபம் திலீபனுக்கான அஞ்சலியை செலுத்தியிருந்தார்கள்.
மட்டக்களப்பு - மாவடிவேம்பு
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், வெள்ளிக்கிழமை (26.09.2025) மட்டக்களப்பு மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணையில், மாவடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பிரிநட் குணபாலனின் தலைமையில் நடைபெற்றது.
தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் சிறிநந்தியின் தாயாரான நல்லரெட்ணம் பவளமலரால் இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.
முதலாம் இணைப்பு
உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கை இல்லை சுயாதீனமான சர்வதேச பொறிமுறை ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (26 ) திருகோணமலை சிவன் கோயில் முன்றலில் இடம்பெற்றுள்ளது
உணர்வுபூர்வமாக நினைவு வேந்தல் செய்ததோடு இதன் போது இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அகிம்சை வழியில் போராடிய தியாக தீபம்
அவர் மேலும் தெரிவிக்கையில், அகிம்சை வழியில் போராடிய தியாக தீபம் திலீபன் அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை துறந்தார்.
23 வயதில் மருத்துவ மாணவனாக இருந்த போது அப்போதைய காலத்தில் சிங்கள பேரினவாத காலணித்துவர்களால் அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டது இந்த நிலையில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போது அரசாங்கம் ஊர்காவல் படையினருக்கு ஆயுதங்களை வழங்கியிருந்தனர்.
இந்திய மகாத்மா காந்தி போன்று அகிம்சை வழியில் போராடிய போது நிராயுதபாணியாக செயற்பட்டு மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவரே தியாக தீபம் திலீபன் .
அவசர கால சட்டத்தை நீக்குதல்,அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருதல், வீதியோர இரானுவ முகாம்களை அகற்றல், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஈழ மக்களுக்காக உண்ணா விரதம் இருந்தபோது புரட்டாதி மாதம் 1987ல் 26 அன்று உயிர் திறந்தார்.
ஐக்கிய நாடுகள் பேரவையின் ஜெனீவா மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் கூறியதாவது உள்ளக பொறி முறை ஊடாக தீர்வை வழங்குவோம் என்று ஆனாலும் உள்ளக பொறி முறை மீது நம்பிக்கை இல்லை சுயாதீனமான சர்வதேச பொறி முறை ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என இந்த தருணத்தில் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

