சிங்கபூரின் ஊடக சட்டமே இலங்கைக்கு அவசியம் - வஜிர அபேவர்த்தன
சிங்கப்பூரில் உள்ளவாரான ஊடகச் சட்டமே இலங்கைக்கு அவசியமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டியவில் நேற்று(18) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயைில்,
ஊடகங்கள் தொடர்பில் நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதைப் பார்த்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு ஊடக சட்டம் அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொறுப்புள்ள ஊடகம்
அதேவேளை, ஜே. ஆர். ஜெயவர்த்தனவே ஊடகங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினார் எனவும், அவரது முயற்சியால் தான் ஜப்பான் ரூபவாஹினியை பரிசாக வழங்கியது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“அத்திட்டத்தினை பீதுருதாலகால மலையிலிருந்து டொரின்டனுக்கு கொண்டு சென்ற போது மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர். அப்போது ஜே ஆர் ஐ திட்டினர்.
அவரை அவ்வாறு திட்டியவர்களே தற்போது ஊடகங்களின் உரிமையாளர்களாக உள்ளனர்.
நாடு என்ற வகையில் நாட்டுக்கு சட்டம் தேவை, ஊடகம் தேவை ஆனால் அந்த ஊடகம் ஒழுக்கமானதாக இருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் காணப்படுகின்ற ஊடக சட்டம் இங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் பொறுப்புள்ள நல்லதொரு ஊடகம் உருவாகும்” என்றார்.
