கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப்போன நிலையில் யாழ் இந்துக்கல்லூரி...!
தமிழ்த்தேசிய எழுச்சியின் ஓர் அடையாளமான யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் மிகப்பெரும் அதிருப்திக்குட்படும் வகையில் நேற்றைய தினம் (30-01-2026) சிங்களச்சங்கம் பூர்வாங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
விடுதலை வேட்கையுடன் தன் ஒரு தலைமுறையையே அர்ப்பணித்துப்போராடிய தமிழினத்தின் கடந்த காலப்பெருமிதங்களை தந்த பேராளுமைகள் பலரை உருவாக்கித்தந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதன் சமகால நிர்வாகத்தின் கீழ் மிகப்பெரும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆறுமுகநாவலரின் தமிழ்ச்சைவப்பண்பாட்டு நீட்சியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை ஒரு பெரும் பாரம்பரியத்தை கடத்தி வந்த நிலையில் மிக அண்மைக்காலங்களில் மாறுபாடான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அதன் பழைய மாணவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
பாடசாலையின் பாரம்பரியமான சின்னம் மாற்றப்பட்டது தொடங்கி பாடசாலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டது, இப்போது சிங்கள சங்கம் ஆரம்பித்திருப்பது என பல்வேறு அதிருப்திகள் வெளியாகி வருகிறது.
தமிழ்த்தேசிய போராட்டத்தை தாங்கி வழிநடத்தி ஒரு பெரும் வரலாற்றை படைத்தவர்களை உருவாக்கித்தந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி இன்று முற்றுமுழுதாக மடைமாற்றப்பட்டிருக்கிறதா என்ற அச்சத்தை உலகெங்கிலும் பரந்திருக்கும் அதன் பழையமாணவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
சைவத்தமிழ் பாரம்பரியத்தை ஈழத்தமிழர்களின் எழுச்சியின் மையப்புள்ளியாக சுழன்றுகொண்டிருந்த இந்த பாடசாலையில் சிங்களச்சங்கம் எதற்காக இவ்வளவு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது ? யாரை திருப்திப்படுத்த இப்படி ஒரு நகர்வு எடுக்கப்படுகிறது ? யாருடைய நிகழ்ச்சி நிரலை ஏற்றிருக்கிறது யாழ் இந்துக்கல்லூரி ?
தமிழ்த்தேசிய இனம் யாழ்ப்பாணத்திலும் அதற்கு வெளியிலும் எதிர்கொள்ளும் ஆக்கிரமிப்பு இனச்சுத்திகரிப்பு என ஒரு பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும் காலப்பகுதியில் இப்படியான நடவடிக்கைகள் ஒரு தவறான வரலாற்றுப்புரிதலையும் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்களுக்கு எதிரான போராட்ட வழிமுறைகளை சிதைத்துவிடும் என்ற அடிப்படையைக் கூட அறியாதவர்களா யாழ்ப்பாணக் கல்விச்சமூகத்தை கையிலெடுத்திருக்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
- தமிழ்த்தேசிய வீரியத்தை விதைத்த யாழ்ப்பாண இந்துக்கல்லூரி இப்போது தமிழ்த்தேசிய சிதைப்புக்கு தளமிடுகிறதா ?
- யாழ்ப்பாணத்தின் நாளைய சமூகத்தலைமைகளை சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்குட்படுத்துகிறதா ?
- தங்களை தியாகித்து தமிழ்த்தேசக்கனவை ஏந்தியவர்களின் கனவுகளில் கரிபூசத்துணிகிறதா ?
- ஒரு பெரும் எழுச்சியின் குறியீடு ஆக்கிரமிப்பாளர்களுக்கான ஆதரவுத்தளத்தை உருவாக்கிக்கொடுக்கிறதா ?
போன்ற சமூக ஆர்வலர்களின் கேள்விகள், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இடம்பெறும் மரபுரிமைச் சிதைப்பிற்கெதிராக பழைய மாணவர் சமூகம் விழிப்படைய வேண்டிய ஒரு காலத்தேவையை எழுப்பி நிற்கிறது.
யாழ்ப்பாணத்தமிழர்களின் எதிர்காலம் யாரிடம் அடகு வைக்கப்படுகிறது ?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்