தமிழர்களை நசுக்க அரசாங்கத்தால் சதி - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
திட்டமிட்ட வகையில் அனைத்துக் கோணங்களிலும் தமிழர்களை நசுக்கி, தமிழர்கள் தொடர்ந்தும் இந்தத் தீவில் வாழ முடியாத நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) குற்றம்சாட்டியுள்ளார்.
வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழர் பகுதியில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
''எல்லை நிர்ணயம் என்ற பெயரில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தால் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, அனுராதபுரத்தின் எல்லைப் பகுதியில் இருக்கக் கூடிய கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச சபைகளுடன் இணைத்து இந்த மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது'' என்றார்.
இதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்திலும் மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து, சிங்கள எல்லை பிரதேசங்கள் மற்றும் பொலனறுவை மாவட்டம் என்பவற்றுடன் சேர்த்துக்கொள்ளும் முயற்சிகளும் இடம்பெறுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.