“தமிழர்களின் கோபத்தில் நியாயம் உண்டு” - ஒரே இரவில் சிங்களவர்களிடத்தல் ஏற்பட்ட மாற்றம்
தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் சிங்களவர்களுக்கு தகுந்த பாடத்தினை புகட்டி இருக்கிறது.
குறிப்பாக, தமிழர்கள் தொடர்பான சாதகமான எண்ணப்பாடுகள் அவர்கள் மத்தியில் எழுந்திருப்பதனை அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் அறிய முடிகிறது.
காலிமுகத்திடல் கடற்படையின் வெறியாட்டம்

நேற்றையதினம் இரவு காலிமுகத்திடலில் இடம்பெற்ற கடற்படையின் வெறியாட்டம் சிங்களவர்கள் என்றும் எதிர்பார்க்காத ஒன்றாகும். அங்கிருந்தவர்கள் மீது கடற்படையினர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறான தாக்குதலின் அடிப்படையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான டிலான் சேனநாயக்க வெளியிட்ட தகவல் சிங்கள மக்களை சிந்திக்க வைத்துள்ளது.
ஆர்ப்பாட்டக் களத்திலிருந்து சமூக வலைத்தளம் ஊடாக அவர் கருத்து வெளியிடுகையில், “எம்மை இவ்வளவு மோசமாக தாக்குகின்றார்கள் என்றால் தமிழர்களை எவ்வாறு இராணுவத்தினர் தாக்கியிருப்பார்கள்.
போரில் மக்கள் செத்து மடியும் போது நாங்கள் போர் வெற்றி கொண்டாடினோம். அப்படி என்றால் நாம் எப்படி முட்டாளாக்கப்பட்டு தமிழர்களை விடுதலைப் புலிகள் என்று ஒதுக்கியிருப்போம்.
சிங்கள மக்கள் மீதான தமிழர்களின் கோபத்தில் நியாயம் உள்ளது
தொலைகாட்சியில் காட்டப்பட்ட விடயங்களை வைத்து பிரபாகரன் மீது எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினார்கள். நாங்களும் அவர்களை புலிகள், தீவிரவாதிகள் என ஒதுக்கி வைத்தோம். அப்படி என்றால் சிங்கள மக்கள் மீதான தமிழர்களின் கோபத்தில் நியாயம் உள்ளது. இராணுவத்தின் செயற்பாடு அவ்வாறான நிலையில் உள்ளதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிலான் வெளியிட்ட காணொளிக்கு பெருந்தொகையான சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமது பின்னூட்டங்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.