ரணிலுடன் இணையும் சஜித் - எதிர்க்கட்சித் தலைவர் யார்..! எட்டப்பட்ட முக்கிய உடன்பாடுகள்
ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நேற்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும் இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி ஏகமானதாக முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டு அரசியல் திட்டத்தை தொடங்குவதற்கான பொறிமுறையை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.
கூட்டு உடன்பாடு
அதன்படி, நாட்டின் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான, ஜனநாயக மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் முகாமைத்துவக் குழு ஆகிய இரண்டும் பொதுக் கொள்கை கட்டமைப்பின் கீழ் இணைந்து பணியாற்றக் கூட்டு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டிணைவில், இரு கட்சிகளும் தமது தனித்துவமான அடையாளங்களைப் பேணிக்காக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார்
இதனிடையே, சஜித் பிரேமதாச தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார் என்றும், தலைமைப் பதவி குறித்து எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார் (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
இந்த ஒருங்கிணைந்த அரசியல் பயணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமட்ட உறுப்பினர்கள் தமது ஆசிகளையும், ஆதரவையும் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
