13 ஆம் திருத்தத்தின் நடைமுறை: ஜே.வி.பியை ஏளனப்படுத்தும் எதிர்க்கட்சி
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும், அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளதை வரவேற்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்டதன் பின்னர் தேசிய மக்கள் சக்தி இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne) ஏளனமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மிக தெளிவாக கூறினார்.
மாகாண சபைகள்
மாகாண சபைகளை அமைக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இது வடக்கு மற்றும் கிழக்கை மாத்திரம் மையப்படுத்தும் பிரச்சனை அல்ல.
இலங்கையின் அரசியலமைப்பில் மாகாண சபைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், அதிபராக தான் பதவியேற்றவுடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். அதாவது, அரசியலமைப்பை சரிவர நடைமுறைப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
யுத்தத்தால் ஏற்பட்ட இழப்பு
அத்துடன், வடக்கு கிழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றதை நாம் மறக்க முடியாது. இதனால் பாரிய இழப்புகளும் ஏற்பட்டிருந்தது.
இந்த யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் இன்றும் பல பிரச்சினைகள் தொடர்கின்றன. ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியாளர்கள் இந்த பிரச்சனை தொடர்பில் எதையும் தேடி பார்க்கவில்லை.
இதனால் மக்கள் இன்னும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர்களது குடும்பங்களுக்கு தெரியாத நிலையே இன்றும் காணப்படுகிறது.
இந்த நிலையில், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரும் பொறுப்புக்கூறலை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் நாம் தற்போது ஆராய வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |