அதானி குழுமத்திடம் ஒப்படைக்கவுள்ள இலங்கையின் 3 விமான நிலையங்கள் : வெளியான உண்மை
இலங்கையின் மூன்று விமான நிலையங்களின் நிர்வாகத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படும் சமீபத்திய செய்திகள் தவறானவை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தனக்கு அறிவித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய கூறியுள்ளார்.
ஹரின் பெர்னாண்டோவின் கருத்து
கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் மத்தள விமான நிலையத்தால் பாரிய இழப்பை சந்தித்து வருவதால் அதனையும் யாழ் விமான நிலையத்தின் அபிவிருத்திகளுக்காகவுமே ஏனைய சாத்தியமான தரப்பினரின் பங்களிப்பைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அதுல கல்கெட்டிய சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஏல செயன்முறைகளுக்கு ஏற்ப நடைபெறும் எனவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை வேறொரு தரப்பினருக்கு வழங்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |