இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள்! விமான நிலையங்களில் ஏற்படப்போகும் மாற்றம்
சுற்றுலாப் பயணிகள் வருகையின் அதிகரிப்பில் வளர்ச்சி நிலவி வரும் நிலையில் அதற்கேற்றாற்போல், நாட்டின் விமான நிலையங்கள் சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் வரவேற்பதற்குரிய வசதிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டில் (2024) இதுவரை மொத்தம் 846,173 பயணிகளை இலங்கையிலுள்ள விமான நிலையங்கள் வரவேற்றுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றிலிருந்து பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
2022 ஆண்டின் ஜனவரியில் மொத்தம் 82,327 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததுடன், இது 2023 ஆம் ஆண்டில் 24.5% அதிகரிப்புடன் 102,545 ஆக உயர்வடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன், ஜனவரி 2024 இல், மொத்தம் 208,253 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 103% வளர்ச்சியாகும்.
இதற்கிடையில், மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஆண்டு (2024) மொத்தம் 23,739 பயணிகளின் வருகையுடன் 102 விமானச் செயற்பாடுகளும், 11,801 சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த ஆண்டின் (2024) ஜனவரியில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் 3,413 சர்வதேச பயணிகளின் வருகையுடன் 271 உள்நாட்டுப் பயணிகளின் இயக்கங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறுகிய கால தீர்வு
அடுத்ததாக, புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 2024 இல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் 846,173 சர்வதேச பயணிகளின் வருகையை பதிவுசெய்துள்ளது, அதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 27,295 பயணிகள் வருகை தந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவிக்கையில், "2018 ஆம் ஆண்டில் 10.8 மில்லியன் பயணிகளைக் கையாண்ட மிக வெற்றிகரமான ஆண்டில் 29,800 சராசரி தினசரி பயணிகளின் எண்ணிக்கையை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரவேற்றது, அவ்வாறான ஒரு பயணிகளின் வருகையை மீண்டும் விமான நிலையம் எட்டியுள்ளது" என்றார்.
மேலும்,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டில் 9.9 மில்லியன் பயணிகளைக் கையாண்டது, சராசரியாக தினசரி சுமார் 27,280 பயணிகளின் இயக்கம் காணபட்டது, அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனமானது குறுகிய கால தீர்வாக விமான நிலையத்தின் உட்கட்டமைப்புத் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |