இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்!
கொரோனா தொற்று நோய் காலத்தின் பின்னரான சரிவைத் தொடர்ந்து மீண்டும் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் வழமைக்கு திரும்பியிருப்பதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் (2024) ஜனவரி மாத சுற்றுலாத்துறை வருமானமானது 391.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது, இது கடந்த 2020 ஆம் ஆண்டின் பின்னர் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்து அதிகளவான வருமானம் கிடைக்கப்பெற்றது, அதன் பிற்பாடு 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கணிசமாக வருமானம் குறைந்திருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று நோய்ப்பரவல் சுற்றுலாத்துறையை சரிவடையச் செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
அதிலிருந்து மெல்ல மீண்டெழுகையில் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடி, நிலைமையை மேலும் மோசமாக்கி சுற்றுலாத்துறையை வீழ்ச்சியடையச் செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், இலங்கை 2.33 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்று, 4,328.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியது, அதற்கு பின்னர் இந்த ஆண்டு தான் மீண்டும் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வேகமேற்பட்டு ஜனவரி மாதத்தில் 208,253 பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும், தவிரவும் இந்த ஆண்டின் (2024) பெப்ரவரி மாதத்தில் முதல் எட்டு நாட்களில் அதிகளவு சுற்றுலாப்பயணிகளாக 60,122 பேரின் வருகை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதிக வருமானம்
இதற்கிடையே 2019 ஆம் ஆண்டில் 1.91 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைதந்து, வருமானம் 3,592.10 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது, பின்னர் 2020 ஆம் ஆண்டில் மேலும் குறைவடைந்து 507,704 சுற்றுலாப்பயணிகளின் வருகையுடன் வருமானமும் 956.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருந்தது.
இவற்றைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மேலும் வீழ்ச்சிகண்டு 194,495 சுற்றுலாப்பயணிகளின் வருகையுடன் வருமானம் 261.40 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டது, இந்த வீழ்ச்சி மெல்ல மறைந்து 2022 ஆம் ஆண்டில் 719,978 சுற்றுலாப்பயணிகளின் வருகையுடன் 1,136.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வருமானமும் மெல்ல அதிகரித்தது.
இவற்றிடையே பொருளாதார நெருக்கடி தொடர்ந்து சவால்களை ஏற்படுத்திய போதும் 2023 ஆம் ஆண்டில் 1.48 மில்லியன் சுற்றுலாப்பயணிகளின் வருகையுடன் வருமானமும் 2,068 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.
இந்நிலையில், இந்த ஆண்டில் (2024) மொத்தமாக 2.4 மில்லியனிற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை வரவேற்று 04 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டுவதனை இலங்கை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |