இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ள 22,950 மெட்ரிக் தொன் உப்பு
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் (Sri Lanka Customs) தடுத்து வைத்துள்ளதாக சுங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
910 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள இந்த உப்பு தொகை, தேசிய தரநிலைகளுக்கு ஏற்ப இல்லாததுடன், அரசாங்கம் நிர்ணயித்த இறக்குமதி காலம் நிறைவடைந்த பின்னர் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய உப்பு தொகையில் இதுவும் ஒன்றாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உப்பு இறக்குமதி
இலங்கை தரநிலைகள் நிறுவனம் (SLSI) வழங்க வேண்டிய சான்றிதழ் இல்லாததாலும், அரசு விதித்த இறக்குமதி காலவரம்பை மீறியதாலும், இந்த உப்பு தொகையை விடுவிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தரநிலைகள் நிறுவனம், கப்பலில் இருந்த முழு உப்புக்கும் தரச் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளதாகவும், அந்த உப்பு தேவையான தரத்தை பூர்த்தி செய்யவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே 15ஆம் திகதி அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில், சீரற்ற வானிலை காரணமாக உள்ளூர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக, ஜூன் 10ஆம் திகதி வரை அரசாங்கம் உப்பு இறக்குமதி தடையை தற்காலிகமாக நீக்கியது.
இதன்போது 1,50,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கை மொத்தமாக 1,43,655 மெட்ரிக் தொன் உப்பை (வரிகளுடன்) 5.7 பில்லியன் ரூபா மதிப்பில் இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவற்றில் இதுவரை 1,20,705 மெட்ரிக் தொன் உப்பு மட்டுமே சுங்கத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
